நீட் ஆள்மாறாட்டத்தில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறி தருமபுரி மாவட்டம் பங்கு நத்தம் ஆறுமுகத்தை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில் இவர் தனக்குப் பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தருமபுரியில் நான் எல்.ஐ.சி. முகவராகப் பணியில் உள்ளேன். தேனீ சிபிசிஐடி காவல் துறையினர் நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நான் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறினர்.
இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறுதலாக என்னை இந்த வழக்கில் காவல் துறையினர் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் பிணை கோரி தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளேன். எனக்குப் பிணை வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் இவ்விவகாரத்தில் மனுதாரர் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கும் ஆதாரம் உள்ளது. வழக்கில் முக்கியக் குற்றவாளியை கைதுசெய்யவில்லை. எனவே மனுதாரருக்கு பிணை அனுமதிக்கக் கூடாது" என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆறுமுகத்தின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தீங்கிழைக்கும் ரசாயன தொழிற்சாலை: விரைவில் மூடப்படுமென அரசு உறுதி!