மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "திமுக-காங்கிரஸ் ஆட்சியின்போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவது தவறு, அவர் பிரச்னையை திசை திருப்புகிறார்.
ஒரு திட்டத்தைக் கொண்டு வருகின்றபோது அந்தத் திட்டம் சரி இல்லை என்று சொன்னால் அதனை மாற்றிக் கொள்வது என்பதுதான் அரசாங்கத்தின் நடைமுறை. நீட் தேர்வு முற்றிலும் சமூக நீதிக்கு முரண்பாடானது.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 விழுக்காடு மாணவர்கள்தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அரசு பள்ளியில் படிப்பவர்கள் மருத்துவர் இடங்களைப் பெற முடியாத நிலை உள்ளது. எனவே பெரும்பான்மை மக்களுக்கு பயன்படாத நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் காங்கிரஸ் மற்றும் திமுகவின் கொள்கை. இதற்கான உண்மைத்தன்மையை உணர்ந்து முதலமைச்சர் தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, கேள்வி கேட்டால் எதிர் கேள்வியை கேட்கக்கூடாது" என்றார்.