தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மாநகராட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான பணிகள், திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான பணி உயர்வை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்றார்.
துப்புரவுப் பணியாளர்களுக்கான ஊதியம் வங்கிகள் மூலமாக அளிக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தொழிலாளர்கள் வட்டிக் கடன்களை தடுப்பதற்காகக் கூட்டுறவு மூலமாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு மத்திய அரசின் காப்பீட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட முருகன், மூன்று மாதத்திற்கு ஒருமுறை முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளோம் என்றார். அது மட்டுமல்லாது, நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க உத்தரவிட்டுள்ளதாக முருகன் தெரிவித்தார்.
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக சுடுகாடு இருப்பது வேதனைப்பட வேண்டியது. இது போன்ற நடைமுறைகளை செயல்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான விடுதிகள், அடிப்படை வசதிகள் இன்றியே காணப்படுவதாக குற்றம்சாட்டினார்.