மதுரை: ஜெய்ஹிந்த் புரம் பகுதியை சேர்ந்த ஸ்ருதி (எ) ஷெரின் பாய்தா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நான் மதுரையில் பள்ளிப் படிப்பை படித்துவிட்டு உயர் கல்விக்காக கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம், மங்களூருவில் உள்ள ராஜிவ்காந்தி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் பாதர் முல்லர் ஹோமியோபதிக் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்தேன். கடந்த 2017ஆம் ஆண்டு எங்கள் குடும்பம் இஸ்லாமிய மதத்தை தழுவி அந்த மதத்துக்கு மாறிவிட்டோம்.
அதன் பின்னர் B.ஸ்ருதி என்ற எனது பெயரை M.ஷெரின் பாய்தா என மாற்றம் செய்தேன். சட்டப்படி பெயர் மாற்றம் செய்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், கெஜட் அலுவலகம் சென்று விண்ணப்பித்தேன். கடந்த 26.04.2017 அன்று முதல் ஸ்ருதி என்ற பெயரிலிருந்து M.ஷெரின் பாய்தா என்ற பெயருக்கு சட்டப்படி மாற்றப்பட்டதாக கெஜட் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நான் மேற்படிப்புகாக கடந்த 28.09.2020 அன்று நடந்த நீட் தேர்வினை எழுதினேன்.
கெஜட் அடிப்படையில் சான்றிதழ்களில் பெயர் மாற்றப்படாததால் B.ஸ்ருதி என்ற பெயரிலே நீட் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்று கடந்த 26.12.2020 அன்று சேலம் மாவட்டம், விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விநாயகா மிஷன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பில் சேர்ந்தேன். கல்லூரி தொடங்கிய பின்னர் நாளிதழ்களில் விளம்பரம் செய்த நகலுடன் கெஜட் ஆவணங்களை கல்லூரியில் சமர்பித்தால் எனது பெயரினை கல்லூரி பதிவேடுகள் மற்றும் சான்றிதழ்களில் B.ஸ்ருதி என்ற பெயரில் இருந்து ஷெரின் பாய்தா என்று மாற்றித்தருவதாக கல்லூரி நிர்வாகம் கூறியது.
கடந்த 20.01.2021அன்று கல்லுாரி நிர்வாகத்தினர் அறிவுரையின் படி நாளிதழ்களில் விளம்பரம் செய்த நகலுடன் கல்லூரி தொடங்கிய நாளான கடந்த 25.02.2021 அன்று எனது பெயரினை மாற்ற கோரி கேட்டபோது எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 13.09.2021 அன்று கல்லூரி நிர்வாகத்தினர் என்னை அழைத்து எனது பெயரினை கல்லூரி பதிவேடுகள் மற்றும் சான்றிதழ்களில் மாற்ற இயலாது என கூறிவிட்டனர். எனவே, கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் பதிவேடுகளில் எனது பெயரினை B. ஸ்ருதி என்ற பெயரிலிருந்து M. ஷெரின் பாய்தா என்ற பெயருக்கு மாற்றித் தர உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் தனது பெயர் மாற்றம் குறித்து உரிய ஆவனங்களுடன் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காதது ஏன்? மனுதாரரின் பெயர் மாற்றம் குறித்து ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் இரு கார்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்!