மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த முத்து ராமன் முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய வழக்கில் முன்பிணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், "நான் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தின் போது முதலமைச்சரை தரக்குறைவாகவும் அவர்களின் குடும்பத்தினர் மீது அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதாக முரளிதரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் என் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பதியப்பட்ட பொய்யான வழக்குகள். எனக்கு முன்பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மனுதாரருக்கு முன்பிணை வழங்கக் கூடாது. மனுதாரரின் சகோதரரும் இதுபோல அரசையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் அவதூறாக பேசி வருகிறார்.
அவருக்கு கடந்த வாரம்தான் சில வழக்குகளில் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து முத்து ராமன் தற்போது இது போல பேசி வருகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி தமக்கு பேச்சு சுதந்திரம் இருக்கு என்பதற்காக பொதுவெளியில் எப்படி வேண்டுமானாலும் பேச முடியுமா? என்றும், யாராக இருந்தாலும் எப்படி பேச வேண்டுமென வரைமுறை உள்ளது எனவும் மனுதாரரை எச்சரித்தார்.
மேலும், மனுதாரர் இதுபோன்ற அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேச மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்: பியூஷ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம்