மதுரை: லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ”பொதுவாகவே நான் படிப்பைப் பொறுத்தவரை மருத்துவத்திற்கு மட்டுமே பரிந்துரை கடிதம் கொடுப்பேன். ஒரு மனிதனின் கடைசி நிலைக்கு என் கடிதம் உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வழங்குவது வழக்கம். இந்த மேடையில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் கல்லூரி முதல்வரை பார்க்கும் போது நானும் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கலாமோ என்ற ஆசையும் உந்துதலும் ஏற்பட்டது.
மதுரையின் பிரபல கல்லூரியான லேடி டோக் கல்லூரியில் படிப்பதற்கு நான் எனது தொகுதியைச் சேர்ந்த மாணவிகள் சிலருக்கு இடம் கேட்டேன். அப்போது திறமையின் அடிப்படையில் தான் தரப்படும் எனக் கூறி கல்லூரி நிர்வாகத்தினர் அலைக்கழிப்பு செய்தனர். அதனால் அவர்கள் கல்லூரி சார்பில் இடம் வாங்கும் போது அந்த இடத்தின் நடுவில் எனது இடம் இருந்ததன் காரணமாக அவர்களுக்கு இடம் தர முதலில் மறுத்தேன் பின்பு சீட் தருவதாகக் கூறியதால் அந்த இடத்தைக் கொடுத்தேன்.
இதே போன்று மீண்டும் சீட் கேட்ட போது சீட் தர மறுத்ததால் கல்லூரி சார்பில் பில்டிங் அப்ரூவல் ஒன்றுக்கு அரசு அலுவலகத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதனையடுத்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரியில் படிப்பதற்கு அதிக அளவிற்கு சீட் தருவேன் என்று சொன்னதால் அனுமதி வழங்கினேன். இப்போது 50 சீட்டு வரை கல்லூரியில் வாங்கி மாணவிகளைப் படிக்க வைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: TNPL: இம்பாக்ட் பிளேயர் விதி.. ஆட்டத்தின் போக்கை மாற்றும் என ஷாருக்கான் பேச்சு
மேற்கண்டவாறு கல்லூரி விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது தொகுதியில் உள்ள மாணவிகளுக்காகக் கல்லூரியில் இடம் பெற்றது மட்டுமன்றி, அதனை வெளிப்படையாக பொது வெளியில் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அரசு கல்லூரியில் மாணவிகளைப் படிப்பதற்கு ஊக்குவிக்காமல் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் படிப்பதற்குப் பரிந்துரை செய்தது சரியா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அதே மேடையில் வணிகவரித்துறையில் ஆணையராக பணியாற்றிய சங்கீதாவைத் தனது பரிந்துரையின் பெயரில் தான் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார் எனவும் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
இதையும் படிங்க: Wedding Photoshoot: மதுரை ரயில் நிலையத்தில் இனி திருமண போட்டோஷூட் எடுக்கலாம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?