திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 44,000 கோயில்கள் உள்ளன. கோயில்களில் இன்றளவும் பாரம்பரிய இசை கருவிகளை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்திவருகின்றனர். கோயிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிக்கும் பாரம்பரிய வாத்தியங்களே பயன்படுத்தப்படுகின்றன. இசைக் கருவிகளை இசைக்க முறைப்படி பயிற்சி பெற்றவர்கள் குறைந்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவில், நாதஸ்வரம், இசை பயிற்சி மற்றும் ஓதுவார் பயிற்சி, நாலயிர திவ்விய பிரபந்தம் ஓதும் அர்ச்சகர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குவதற்கு மாவட்டந்தோறும் பயிற்சி பள்ளி அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து பல இடங்களில் இது போல பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் புற்றீசல் போல் பெருகிய அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தற்போது காணாமல் போய்விட்டன. அதேபோல் 2019-2020 அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இந்நிலையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில் ஏற்கனவே விடுமுறை கால வகுப்புகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. ஆகவே, மனுதாரர் கோரிக்கை குறித்து புதிய மனுவை, தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கி உரிய நிவாரணம் பெறலாம் என தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பிளாஸ்டிக்கை உண்டதால் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு!