இவ்விவகாரம் குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் - 2006, மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் - 2019, ஐஐடிகளுக்கான இயக்குநரின் ஆணை ஆகியவற்றை தங்களின் பார்வைக்குக் கொண்டு வரவிரும்புகிறேன்.
ஐஐடிகளில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள், முனைவர் ஆய்வுப் பிரிவுகளில் மாணவர் அனுமதி; பேராசிரியர், பேராசிரியரல்லாத நியமனங்கள் ஆகியவற்றுக்கான இடஒதுக்கீடு அமலாக்கம் குறித்து குழு ஒன்றை மேற்கண்ட ஆணை அமைத்தது.
இக்குழுவிற்கு டெல்லி ஐஐடி இயக்குநர் தலைவராகவும், சென்னை ஐஐடியின் பதிவாளர் அமைப்பாளராகவும் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அக்குழுவிற்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டு, தனது அறிக்கையை முடிவெடுப்பதற்கான உரிய தரப்பினரின் பரிசீலனைக்கும், ஒப்புதலுக்கும் முன் வைக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.
மேற்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது 100 நாட்கள் உருண்டோடிவிட்டன. மேற்கண்ட குழு தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இந்த ஆய்வு தேவைப்பட்டதன் காரணம், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான சமூக நீதியை வழங்குவதில் மத்திய கல்வி நிறுவனங்கள் தவறியதனால் தான்.
அதுவும் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த நிலை நீடிக்கிறது. பேராசிரியர், பேராசிரியரல்லாத நியமனங்களிலும் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு. ஆகவே, அதற்கான 2019 சட்டமும், உறுதியாக அதன் நோக்கம் சிதையாமல் அமல்படுத்தப்பட வேண்டும்.
சமூகத்தின் அடித்தள மக்களாய் விளங்கக் கூடிய எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கான நீதி வழங்கப்படுவது அதிக முன்னுரிமை பெற வேண்டிய பிரச்னை என்பதை நீங்களும் அறிவீர்கள். இது சம்பந்தமாக உங்களின் விரைவான மறுமொழியை எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மதுரையில் மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி' - சு. வெங்கடேசன் எம்.பி