மதுரை: உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகளின் மூலமாகக் கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக கல்விசார் நிலைக்குழு உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், அனைத்து வங்கி உயர் அலுவலர்கள், கல்வித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சு. வெங்கடேசன், ”மதுரை மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்க முடிவுசெய்துள்ளோம்.
அனைவருக்கும் கல்விக்கடன்
மாவட்டத்தில் இந்தாண்டு உயர் கல்வி படிக்கவுள்ள 20 ஆயிரம் மாணவர்களில் தேவைப்படும் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். 500 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கி தமிழ்நாட்டின் முன்மாதிரியாக மதுரையை மாற்றவுள்ளோம்.
கிராமப்புற மாணவர்களுக்கு கல்விக்கடனைப் பெறுவது கடினமாக உள்ளதால் அதனை எளிதாக்கும் வகையில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்விக் கடன் பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்க ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
மாணவர்களுக்கான வித்யாலட்சுமி போர்டல் பதிவு போன்ற உதவிகளைச் செய்ய வட்டார அளவிலும், மண்டல அளவிலும் கல்விக் கடன் வழிகாட்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கல்விக்கடன் வழிகாட்டுதல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
கல்விக்கடன்கள் பெறுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். இதேபோன்று கல்விக்கடன் அதிகம் வழங்குவதில் மாநிலத்திலேயே மதுரை மாவட்டத்தை முன்மாதிரியாக மாற்ற முயற்சி செய்வோம்.
கட்டணம் செலுத்த முடியாத நிலையில் ஒரு மாணவன் கல்வியைப் பயில முடியாது என்ற நிலை மாற வேண்டும். கார்ப்பரேட்களுக்குப் பல கோடியை கடனாகப் பெற்று எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பது கடினமாக உள்ளது. மாவட்ட அளவிலான கல்விக்கடன் வழிகாட்டுதல் மையம் மூலமாக நேரிலோ, தொலைபேசி எண், மின்னஞ்சல் மூலமாகவோ தகவல் பெறலாம்” என்றார்.
மதுரை நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி 6ஆம் வகுப்பு குடிமையியல் தேர்வில் இஸ்லாமிய பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ”பாடத்தில் என்ன இருக்கிறது, என்ன அர்த்தத்தில் கேட்கப்பட்டது என்பது குறித்து பள்ளி முதல்வரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.