மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பகுதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பெண்களுக்கு 33 விழுக்காடு இடத்தைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி. ஆனால் தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் கரூர் எம்.பி. ஜோதிமணியை கரு. நாகராஜன் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். அதனை ஆதரித்து சமூக வலைதளங்களில் பாஜகவினர் பலர் பதிவுகளை செய்து வருகின்றனர்.
பாஜகவினர் பலர் பெண்களுக்கு எதிராக பேசி வருவது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தை 100 விழுக்காடு செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரும் அதனை அறிவித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியரும் 100 விழுக்காடு வேலைவாய்ப்பு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால் நேற்று வருவாய் துறை அமைச்சர் சட்டபேரவை உறுப்பினராக இருக்கக் கூடிய திருமங்கலம் தொகுதியில் உள்ள குராயூர் பகுதியில் 600 மக்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இருந்து வருகின்றனர். இதில் 66 பேர் மட்டுமே அங்கு வேலை செய்து வருகிறார்கள். இது 10 விழுக்காடு மட்டுமே ஆகும். எனவே நூறு நாள் வேலைத்திட்டத்தில் இருக்கிற அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும். இதில் முதலமைச்சரும் தலையிட வேண்டும்.
ஊரக துறையில் 100 விழுக்காடு வேலை என்பது வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது. மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவித்துள்ள நிதி வரித்துறையிலிருந்து 42 விழுக்காடு தமிழ்நாட்டுக்கு தர வேண்டியது என 14ஆவது நிதி கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால் நமக்கு கிடைத்துள்ளது 41 விழுக்காடு மட்டுமே, அதுவும் 20 நாள்கள் தாமதமாகவே நமக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு தங்களுடைய பங்கினை கேட்கிறது. அதனை மத்திய அரசு யோசித்து, யோசித்து வட்டிக் கடைக்காரர்கள் போல் தருகிறது' என்றார்.
இதையும் படிங்க... பல காவல் நிலையங்களில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீது பாஜகவினர் புகார்!