மதுரை: திருமங்கலம் அருகே கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா (Non Vegetarian Festival in Madurai) இன்று (ஜன.7) நடைபெற்றது. இதில் சுமார் 65 கிடாக்கள் வெட்டப்பட்டு, 2,000 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்ட நிலையில், சுமார் 10,000 ஆண்கள் இந்த கறி விருந்தில் கலந்துகொண்டனர்.
கரடிக்கல் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கிடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம். இரவு நேரத்தில் கிடா வெட்டி அதிகாலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் இவ்விருந்தில் கலந்துகொண்டனர்.
இங்குச் சாப்பிடும் இலையை எடுப்பதில்லை. இந்த இலை தானாகவே காற்றில் பறந்து மறைந்துவிடும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை. அதுவரையில், அந்த பகுதியில் எந்த பெண்களும் வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.பல நூறு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருவதாக அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் கூறுகின்றனர். இதில், கலந்து கொள்ளும் ஆண்களின் வேண்டுதல் வெகு விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய தமிழர் பண்பாட்டுத் திருவிழா!