மதுரை மாவட்டம் கரிமேடு மீன் சந்தையில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகப் பலவிதமான மருந்துப்பொருள்கள் தெளிக்கப்படுவதாக மதுரை உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் சோம சுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அவரது தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நேற்றிரவு கரிமேடு மீன் சந்தையிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில், கடைகளிலிருந்த மீன்களைச் சோதனையிட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு ஆய்வாளர்கள், சேகரிக்கப்பட்ட மீன் மாதிரிகளில் மருந்துகள் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒரு டன்னுக்கு மேற்பட்ட மீன்களைப் பறிமுதல்செய்த உணவுப்பொருள் பாதுகாப்புத் துறையினர், அதனைப் பத்திரமாக எடுத்துச்சென்று அப்புறப்படுத்தினர்.
இது குறித்து உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், மீன்களில் மருந்துகள் கலந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்த தகவலின்பேரில் தற்போது ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இந்த ஆய்வில் ஒரு டன்னுக்கும் மேற்பட்ட மீன்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மக்களுக்குப் பாதுகாப்பான உணவுகளை வழங்குவதே உணவுப்பொருள் பாதுகாப்புத் துறையின் நோக்கம் எனவும், தற்போது நடத்தப்பட்ட சோதனை வியாபாரிகளுக்கு வெறும் எச்சரிக்கைதான் என்றும், இதுபோன்ற சோதனைகளை இனி தொடர்ச்சியாக நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'ஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு மின் இணைப்பு' - அமைச்சர் தங்கமணி தகவல்