மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலியான அரசு ஆவணங்களைக் கொண்டு ரூ.20, 20,000 பண மோசடி செய்ததாக அருப்புகோட்டையைச் சேர்ந்த சுந்தர மகாலிங்கம் என்பவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் விஜய நல்லதம்பி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப். 4) செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தரமகாலிங்கம் கூறுகையில், 'எனது மகன் சுந்தர்ராஜ் பி.ஏ., பி.எட் படித்துள்ளார். அவருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய வழக்கறிஞரும்(ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்), அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலாளருமான விஜய நல்லதம்பி என்பவரிடம் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் மதுரையில் வைத்து 20 லட்சம் ரூபாயை ரொக்கமாக வழங்கினேன்.
இதற்காக அவர், TRB R.C. NO.3285/R2/2009, 21.01.2011 என்ற தேதியிட்ட பணி நியமன ஆணை நகல் ஒன்றை என்னிடம் வழங்கினார்.
இதற்கான இறுதி பணி நியமன ஆணை வீட்டிற்கே வந்து சேரும் எனவும் உறுதியளித்தார். பிறகு இறுதி பணி நியமன ஆணை அனுப்ப வேண்டுமானால், மேலும் ரூபாய் 20,000 செலுத்தும்படி வற்புறுத்தினார்.
அந்தப் பணத்தையும் அவரது வங்கிக்கணக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி அனுப்பினேன்.
பிறகு விசாரித்தபோது அவர் வழங்கிய பணி நியமன ஆணை போலியான ஆவணம் என தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் நேரில் முறையீடு செய்தபோது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். தற்போது அவர் மீது மோசடிப் புகார் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்தேன்.
இதனால் எனக்கும் தீர்வு கிடைக்கும் என நம்பி காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளேன்.
விஜய நல்லதம்பியிடம் என்னைப் போலவே திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், சிதம்பரத்தைச் சேர்ந்த சாம், சுரேஷ்பாபு, நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வதாஸ், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவிச்சந்திரன், தர்மபுரியைச் சேர்ந்த சதாசிவம், கடலூரைச் சேர்ந்த இளங்கோவன், சென்னையைச் சேர்ந்த இந்திரா ஆகியோர் உட்பட பலரிடம் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
ஆகையால், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு இந்த குற்றச்சம்பவத்திற்குக் காரணமான விஜய நல்லதம்பி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, மோசடி செய்த பணத்தை மீட்டு அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பப்ஜி மதன் மனைவியிடம் லஞ்சம் கேட்ட அலுவலர் பணியிடை நீக்கம்!