கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் நீதி மையம் காஞ்சிபுரம், பெரம்பலூர் தவிர்த்து, தமிழ்நாட்டிலுள்ள 38 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்ய வாக்கு வங்கியைக் கைப்பற்ற பல்வேறு கட்சினர், கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர்.
கூட்டணிகளைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் நீதி மையம் தேர்தலில் களமிறங்காமல் இருந்தது. இந்த நிலையில் எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கமல் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மதுரை திருமங்கலம் பகுதியில் நவம்பர் ஏழாம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவிக்க எண்ணிய நிர்வாகிகள், சுவர் சித்திரத்தில் கறுப்பு, சிவப்பு நிறத்தில் திமுக கட்சிக் கொடியின் நிறத்தைப் பயன்படுத்தியதால், அவ்வழியாக செல்வோர் ஒருகணம் நின்று சுவர் விளம்பரத்தை கூர்ந்து கவனித்துச் செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக அதிமுக, திமுக, பாஜக , தேமுதிக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்ற நிலையில், மதுரையில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரம் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.