மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா திருநகர் ஹார்விபட்டி, பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பாக மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா, தகுந்த இடைவெளியை கடைபிடித்து ஏழை எளிய மக்கள் மூவாயிரம் பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
![https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-admk-mla-rajanchellappa-byte-script-visual_10062020121313_1006f_1591771393_65.jpg](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-admk-mla-rajanchellappa-byte-script-visual_10062020121313_1006f_1591771393_65.jpg)
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில், "திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் மறைந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அன்பழகன் நலம் குறித்து முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் விசாரித்தனர். மருத்துவர்கள் கடுமையாக முயற்சித்தும் அவர் மறைந்த செய்தி வந்துள்ளது என அதிமுக ஏற்கனவே இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து நாங்களும் வருந்துகிறோம். கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடுமையான முயற்சி எடுத்துவருகிறது. அரசின் நிர்வாக திறமையுடன் அமைச்சர்கள் குழு, அலுவலர்கள் குழு ஆகியவை அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பான பணியை செய்து வருகிறது. முதலமைச்சர் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்கின்றனர். சட்டபேரவை தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருப்பதால் அறிவிக்கப்படும் தேதியில் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.