மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கடந்த நவம்பர் மாதப் பருவத் தேர்வை எழுதினர்.
தேர்வுத்தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றை மதிப்பீடு செய்யும் பணி கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் வழக்கமாக டிசம்பர் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஏப்ரல் 2020ஆம் ஆண்டு பருவத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். மேலும் இறுதியாண்டு மாணவர்கள் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் பாதிப்படைந்தனர்.
இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை ஓரிரு நாள்களில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் நவம்பர் பருவத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை ( இன்று) இரவு வெளியிடப்பட உள்ளதாக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை டயாலிசிஸ் கருவி வழக்கு - சுகாதாரத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு