மதுரை காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறையில் மாணவ மாணவியர் கடந்த 10 ஆண்டுகளாக திரை விமர்சன அவையை சிறப்புடன் நடத்திவருகின்றனர். அகிரா குரசோவா, ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கிலிருந்து ராஜு முருகன், பா. இரஞ்சித் வரை அனைத்து திரை இயக்குநர்களின் சமூகம் சார்ந்த திரைப்படங்களையும் அவற்றில் கையாளப்படும் தொழில்நுட்பம், சொல்லப்பட்டுள்ள கருத்தியல்கள் என எல்லாவற்றையும் அலசி நுணுக்கமான பார்வையில் ஆராய்ந்து விவாதத்தை மேற்கொள்கின்றனர்.
பெண்ணியம், அரசியல், சூழலியல், விளிம்புநிலை மக்களின் பிரச்னைகள், சாதியம், மாற்றுத்திறனாளிகள், தலைமைத்துவம் என வகைப்பாடு செய்து ஒவ்வொரு தலைப்பிலும் நூறு திரைப்படங்களைத் திரையிட்டு அது குறித்து விமர்சனம் செய்வது என முடிவெடுத்து வாரந்தோறும் திரையிடல் நிகழ்வை நடத்திவருகின்றனர்.
இதன்மூலம் மாணவர்களிடையே சமூகம் குறித்தும் சினிமா தொழில்நுட்பம் குறித்தும் ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்து வருகிறது. தற்போது பெரும்பாலன சினிமா விமர்சனங்கள் வெறுப்பை கக்குவதாக இருந்துவரும் சூழ்நிலையில் மாணவர்கள் திரைப்படத்தை திரையிட்டு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைத்து உரையாடல் வரவேற்கத்தக்கது.
இது குறித்து அத்துறையின் தலைவர் முனைவர் நாகரத்தினம் கூறுகையில், "தொடர்பியல் துறை தனித்துவம் வாய்ந்தது என்பதால் இங்கு பயிலும் மாணவ மாணவியரை அதற்கேற்றாற்போல் உருவாக்க வேண்டியது எங்களது கடமை. ஆகையால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 'பிலிம் அப்பிரேசியேஷன் போரம்' என ஆரம்பித்து பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களைத் திரையிட்டுள்ளோம்.
தொடர்பியல் துறை மாணவர்கள் மட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்திலுள்ள பிற துறை மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் இந்தத் திரையிடலில் கலந்துகொள்கின்றனர்.
ஒரு காட்சியை இதுபோன்ற அமைத்தால் சிறப்பாக இருக்கும்; இந்த இடத்திற்கு இப்படி ஒரு ஒளிப்பதிவுக் கோணம் அவசியமற்றது என்பது போன்ற விவாதங்கள், திரைப்படத்தில் பேசப்பட்டுள்ள கருத்துகள் குறித்தான விவாதங்கள் மாணவர்களிடையே காரசாரமாகவும் சூடாகவும் நடைபெறும்" என்றார்.
இந்தத் திரையிடல் அனுபவம் குறித்து தொடர்பியல் துறையில் முது அறிவியல் இரண்டாமாண்டு பயிலும் விக்னேஷ் பேசுகையில், "இந்தத் துறையில் சேர்வதற்கு முன்பு வரை எனக்குப் பெரிய அளவில் திரைப்படங்கள் மீது நாட்டமில்லை.
இங்கு திரையிடப்பட்ட திரைப்படங்களைப் பார்த்த பின்புதான் எனக்குத் திரைப்படங்கள் மீது நாட்டம் ஏற்பட்டது. இங்கு திரையிடப்பட்ட திரைப்படங்கள் என்னை மாறுபட்ட வகையில் சிந்திக்க வைத்தன. திரைப்படங்கள் வழியாக நான் சமூகத்தை இன்னும் அதிகமாக புரிந்துகொள்கிறேன்" என்றார்.
இந்தத் திரையிடல் அனுபவம் குறித்துப் பேசிய தொடர்பியல் துறை இரண்டாமாண்டு மாணவி ஷீலா, "புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் இங்கு திரையிடப்படுப்படுவதால், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விசாலமான அறிவைப் பெறமுடிகிறது. திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எங்களுக்குப் பாடமாக இருக்கின்றன. அதில் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டதை மக்களுக்கு கற்பிக்கவும் இந்தத் திரை விமர்சன கூடல்கள் வாய்ப்பளிக்கின்றன" என்றார்.
சமூகத்தில் பலம்வாய்ந்த கலையாகவும் வெகுமக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் சினிமா குறித்து 10 ஆண்டுகளாக மாணவர்களிடையே ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஏற்படுத்திவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறையின் செயல் பாராட்டுக்குறியது.
இதையும் படிங்க: கொரோனை எதிர்க்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறும்படம்!