மதுரை: மதுரையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், "மூன்று நாட்களுக்கு முன்பாக கூட்டணி குறித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேசும்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த கூட்டணி தொடரும் என்றும் அதில் மாறுபட்ட கருத்து கிடையாது என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில் கூட்டணி தர்மத்தின்படி அவர்கள் நடப்பார்கள் என நம்புகிறேன். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ளது. அவர்தான் அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். எங்களது முதல் குறிக்கோள் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறவேண்டும்.
திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று. வருகிற தேர்தலில் எங்களது சின்னத்தில்தான் நிற்போம். ரஜினிகாந்த் மரியாதைக்கு உரியவர். அவர், உடல் நலம் சரியில்லை. அதனடிப்படையில் அவர் கட்சித் தொடங்கவில்லை என கூறிவிட்டார்.
ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு துணை நிற்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் நெருங்கும்போது அந்த முடிவை அவர் எடுப்பார் என நம்புகிறேன். மு.க. அழகிரியின் ஆலோசனைக் கூட்டம் நிச்சயமாக திமுகவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை" என்றார்.
மேலும், மதுரையின் பல்வேறு வளர்ச்சிக்காக அதிமுக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை, விமான நிலைய விரிவாக்கத் திட்டம் போன்றவை விரைவில் நடைபெறவுள்ளது என்றார்.
இதையும் படிங்க: ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்த அழகிரி