மதுரை: மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயண பாபு தலைமையில் திருநெல்வேலி மருத்துவ முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம் தலைமையில் மூன்று பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டீன் ரத்தினவேல், துணை முதல்வர் தனலட்சுமி, மாணவர் அமைப்புத் தலைவர் ஜோதிஸ் குமாரவேல் உள்ளிட்டோரிடம் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாராயண பாபு,”மாணவர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். விசாரணை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறுதலாகப் பதிவிறக்கம் செய்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியது சுற்றறிக்கை மட்டுமே, உத்தரவு அல்ல.
பிப்ரவரி 10ஆம் தேதி சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். தவறுதலாக உறுதிமொழி எடுத்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுதிமொழி ஒத்திகை எடுக்கப்பட்டபோது பொறுப்பு முதல்வர் தனலெட்சுமி களத்தில் இல்லை என விசாரணையில் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை அடிப்படையில் முதல்வரை மீண்டும் நியமிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்” என்றார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கு : தன்னையும் கொலை செய்ய முயன்றதாக காவல் ஆய்வாளர் பரபரப்பு கடிதம்