திருமங்கலம் தொகுதிக்குள்பட்ட சோலைப்பட்டி, அம்மாபட்டி, கீழக்காடனேரி, குமாரபுரம், சாலிச்சந்தை, சொக்கம்பட்டி, பொன்னையாபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்கு சேகரித்தார்.
சோலைப்பட்டி கிராமத்தில் அவர் வாக்கு சேகரிக்க சென்றபோது, அப்பகுதியில் விவசாயிகள் களத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த துவரை கதிர்களை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விவசாயிகளிடம் சேர்ந்து தானும் கதிர் அடித்தார்.
தொடர்ந்து விவசாயிகளின் மத்தியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ”நாட்டின் முதுகெலும்பு உங்களைப் போன்ற விவசாயிகள்தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விவசாய மக்களுக்காக 5000 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்தார். குறிப்பாக முல்லை பெரியாறு, காவிரி போன்றவற்றில் விவசாய மக்களின் உரிமை பிரச்சினைக்காக போராடி வெற்றி பெற்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உங்களைப் போன்ற விவசாயி ஆவார். உங்களின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்தவர் திருவாரூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பங்கேற்றபோது அங்கு விவசாய நடவு வேலை நடைபெற்றிருந்தது. முதலமைச்சரும் அங்கு நாற்று நட்டார். முதலமைச்சர் சேற்றில் கால் வைத்து அந்த நல்ல நேரம் இன்றைக்கு தமிழ்நாட்டில் விளைச்சல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது அம்மாவின் வழியில் 12,110 கோடி ரூபாய் விவசாயக் கடனை முதலமைச்சர் ரத்து செய்துள்ளார். இதன் மூலம் உங்களைப் போன்ற எண்ணற்ற விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் 17,000 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்த ஒரே அரசு அதிமுக அரசு.
அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகை அடகு வைத்து இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இப்படி பல்வேறு திட்டங்கள் மூலம் இன்றைக்கு விவசாயிகள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது ஆகவே உங்களைப் போன்ற விவசாயி முதலமைச்சர் எடப்பாடி இந்த நாட்டை மீண்டும் ஆள வேண்டும்.
இந்தத் தொகுதியில் உங்கள் சேவகனாக நான் நிற்க்கிறேன் உங்கள் வாக்குகளை இரட்டை இலைக்கு அளித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லை.. வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நூதனப் போராட்டம்!