ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 30ஆம் தேதி நடைபெறுவதையொட்டி திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட T.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரப்புரை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது;
' இந்திய தேசத்தின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று. கோரிக்கை வைத்த இரண்டு நாட்களிலேயே இன்றைக்கு பரிந்துரைக்க சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிசீலனை செய்யப்படும் என அறிவிப்பு நமக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
ஆகவே, இது எதைக் காட்டுகிறது என்று சொன்னால் தமிழ்நாட்டைக் காப்பதில், தமிழ் மண்ணைக் காப்பதில், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் தான் இன்றைக்குச் சரித்திர சாதனைப் படைத்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, அவர்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, இதுபோன்ற எந்த கோரிக்கையும் அவர்கள் வைத்து வெற்றி பெறவில்லை. ராஜபக்சவிடமிருந்து தமிழினத்தைக் காட்டிக் கொடுத்ததற்காகப் பரிசுகளைப் பெற்றார்கள்.
அரசினுடைய விளக்கத்தை மக்களிடையே கொண்டுபோய் சேர்ப்பதற்கும் சத்தியத்தை சொல்வதற்கும் தடையாக இவர்கள் போராட்டத்தின் வடிவிலேயே மக்களுடைய அமைதியை சீர்குலைப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். தோல்வி பயத்தால் தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க திமுகவினர் வலை விரிக்கிறார்கள். வலையில் யாரும் விழவேண்டாம். வலையில் சிக்காமல் முதலில் தப்பித்தவர் கமல்ஹாசன் ' என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் நான்கு மாவட்டங்களில் தனித்துப் போட்டி என்பது குறித்த கேள்விக்கு;
' அவர்களிடம் ஒரு கருத்தும் கிடையாது. தோல்வி பயம் இருப்பதால்தான் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி போராட்ட வடிவிலேயே அமைதியைக் குழைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதிலும் ஸ்டாலின் அவர்களுக்குத் தோல்வியே மிஞ்சும் ' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பும் இல்லை’ - அமைச்சர் ஆர்பி உதயகுமார்!