மதுரை: மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவர் விடுதியை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று (ஜூலை 24) ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளுக்காக, அவர்களது முகாமில் புதிய வீடுகளைக் கட்டித்தர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதிமுக சரியாக ஆட்சி செய்யாததால், மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர்.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தர சிறப்புகுழு அமைப்பு
கடந்த இரண்டு மாதங்களில், வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்துள்ளனர், அவர்களில் 30 பேரின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 553 இலங்கை அகதிகளின் குடும்பங்கள், அகதிகள் முகாமுக்கு வெளியே வசித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமையைப் பெற்றுத்தர, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்" என்றார்.
பின்னர் கரோனா தடுப்பூசி மையத்தினை ஆய்வு செய்த அமைச்சர், மருத்துவர்கள், நோயாளிகளிடம் கரோனா தடுப்பூசி குறித்து பேசினார். பொதுமக்கள், மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'தர்மபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம் தாமதத்துக்கு அதிமுக அரசே காரணம்'