மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம், கோச்சடை உள்ளிட்டப் பகுதிகளில் வாழ்கின்ற முதியோர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார்.
பின்பு அவர் கூறியதாவது, 'பசியில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற ஜூன் மாதம் வரை பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியே ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பிற மாநிலங்களில் எல்லாம் அங்கு உள்ள ஆளும் கட்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றன. அதேபோன்று கேரளாவிலுள்ள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு தந்து கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த இக்கட்டான சூழலிலும் அரசியல் செய்ய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். பிகார்காரரான பிரசாந்த் கிஷோரின் ஊதுகுழல் ஆக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மக்கள் திமுகவை புறந்தள்ளிவிட்டனர்
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், மதுபான கடைகள் இயங்காது. மேலும் காவல் துறைக்கு உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகுந்த கட்டுப்பாட்டுடன் மதுபான கடைகள் இயங்கும். அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மதுபான விலை ஏற்றம் குறித்து ஒரு அமைச்சராக இருந்து கொண்டு என்னால் விமர்சனம் செய்ய முடியாது’ என்றார்.