மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிகளிலுள்ள கிராமப்புறங்களில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக இலவசமாக ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் 200க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
அதன்பின் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் தொடங்குவதற்கு ஒவ்வொரு ஆசிரியர்களும் ஆர்வமாக இருப்பதாக அலுவலர்கள் கூறினார்கள்.
மாணவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக தகுந்த இடைவெளியை கடைபிடித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். பாதுகாப்பு தான் முதல் முக்கியம். எனவே, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக சிறப்பு வகுப்புகள் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் இதை கடைபிடிக்க வேண்டும்.
நமக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால் நோய்த் தொற்று இல்லாத தொகுதியாக நமது திருமங்கலம் தொகுதி உள்ளது. திருமங்கலம் நகர் பகுதியில் ஐந்து நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு தற்போது அவர்கள் பூரண குணமடைந்து 14 நாள்களுக்கு மேல் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவது போல ஆந்திராவில் செயல்படுத்த வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். உலகத்திற்கே முன்னுதாரணமாக இந்தியா உள்ளது, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது"என அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க:சிறுமியை கடத்திய இளைஞருக்கு போலீஸ் வலை!