மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதிக்குள்பட்ட பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சௌடார்பட்டி, வலையப்பட்டி, பூசலப்புரம், மதிப்பனூர், நாகையாபுரம், இடையபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரோனா காலத்தில் மக்களோடு துணைநின்றது அதிமுக அரசு - அமைச்சர் உதயகுமார் பொட்டிபுரத்தில் வாக்கு சேகரித்தபோது அங்கு கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தபோது, கட்டட தொழிலாளிக்கு உதவும்வண்ணம் கட்டடத்திற்கு தண்ணீர் பாய்ச்சினார். பிறகு அந்த ஊரைச் சேர்ந்த வயதான பெண்களின் காலில் விழுந்து வணங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கபசுர குடிநீர் தயாரிக்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பெண் பணியாளர்களோடு இணைந்து அவர்களுக்கு சிறிது நேரம் உதவிபுரிந்தார்.
பிறகு பரப்புரையின்போது பேசிய அவர் கூறியதாவது:
இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய்ப் பரப்புரைகளைச் செய்துவருகின்றனர். சட்டப்பேரவையில் தற்காலிகமான மசோதாதான் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர்.
68 சமுதாயத்திற்கு 7.5 இட ஒதுக்கீடு என்றும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு 10.5 இட ஒதுக்கீடு என்றும், இதர சமுதாயத்திற்கு 2.5 இட ஒதுக்கீடு என்றும் கூறி வருகின்றனர். அது உண்மை அல்ல; மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அதிமுக செல்வாக்கை யாரும் குறைத்து நினைத்தால் அது பகல் கனவாகவே போய்விடும். 68 சமுதாய டிஎன்டி அங்கீகாரத்தை வழங்கி 50 ஆண்டுகால கனவை நனவாக்கியது அதிமுக அரசே. நாமெல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் நம்மைப் பிரிக்க முடியாது.