மதுரை கப்பலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குள்பட்ட திறந்தவெளி சேமிப்புக் கிடங்கினை வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆய்வுசெய்தார். அந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கரோனா தொற்று காலகட்டத்திலும் வேளாண்மை உற்பத்தி தடையின்றி நடைபெற்றுவருகிறது. தானியங்கள், காய்கறிகள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா காலத்திலும் அதிகமான விளைச்சலை நாம் பெற்றுள்ளோம். இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மை மீது முதலமைச்சர் கொண்டுள்ள அக்கறை. தொழில் துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல கோடி முதலீடுகளைப் பெற்று பல்வேறு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி நான்கு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மக்களை குழப்பிவருகிறார்கள். கடந்த காலத்தைவிட தற்போது வேலையில்லா திண்டாட்டம் குறைக்கப்பட்டுவருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
தமிழ்நாடு மக்களை குழப்ப நினைத்தால், அது திமுக தலைவர் ஸ்டாலினுக்குதான் பின்னடைவை ஏற்படுத்துமே தவிர, பொதுமக்களுக்கு அல்ல'' என்றார்.
இதையும் படிங்க: ஈரோடு சாலை விபத்தில் 4 பேர் பலி: முதலமைச்சர் நிவாரணம் நிதி அறிவிப்பு!