மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மனதில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.
பிற இயல்பான நாள்கள் போன்று சமூக பொதுவெளியில் இயங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மதுபானக் கடைகள் திறக்க முடிவு என்பது பிற மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அப்பகுதிகளுக்கு படை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கும் பொருட்டுதான் எடுக்கப்பட்டுள்ளது.
அதுவும்கூட பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைசியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து 28 நாள்களுக்கு பிறகு அப்பகுதியில் நிலவும் சூழலை பொறுத்து தளர்வு ஏற்படுத்தப்படும்.
மதுரை மாநகரத்தில் அதுபோன்று ஒரு சில பகுதிகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் பல புதிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களின் சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும்.
அதேபோல், பொது முடக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் அவரவர் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்ய மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க:மக்களை காக்கும் காவல் துறையினருக்கு கிடைத்த பரிசு ‘கரோனா’!