மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்களுடன் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்தும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சரின் சீரிய முயற்சியால் முழு ஊரடங்கு பயனைத் தந்துள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று குறைந்துவருகிறது.
ஒரு வாரத்துக்கு முன்னர் 1,500 ஆக இருந்த பாதிப்பு தற்போது 700-க்கும் கீழ் வந்துள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் மதுரையில் கரோனா பாதிப்பு மிக மிகக் குறையும்.
மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், ஆக்ஸிஜன் படுக்கைகளை உயர்த்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்க ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை அரசு மருத்துவமனையில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் நிரந்தர ஆக்ஸிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் ஒரு நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்