மதுரை: கூடல் புதூர் பகுதியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தைக் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி வைத்தார்.
திமுக அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை
அதன்பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மூர்த்தி, "அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே அவர்களின் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் திமுக அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த வாரம் பத்திரப் பதிவுத் துறையில்கூட சோதனை நடத்தி உள்ளார்கள்.
எனவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் எந்த உள் நோக்கமும் கிடையாது. இது சட்ட நடவடிக்கை. இதை அரசியலாக்க வேண்டாம்.
மாரிதாஸ் விவகாரத்தில் தேவைப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். திமுக மாவட்டச் செயலாளர்கள் வசம் காவல் துறை உள்ளதாக அண்ணாமலை சொல்வது தவறு. யார் தவறு செய்தாலும் காவல் துறை தண்டிக்கும். திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்குத் தேவையானதை முதலமைச்சர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் தவறாகப் பதிவுசெய்யப்பட்டு இருந்தால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறான பதிவுகளை ரத்துசெய்யும் சட்ட முன்வடிவு நடைமுறைக்கு வந்தால் இதுபோன்ற முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்