மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பாரைப்பட்டி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை தமிழ்நாடு வணிகவரித் துறை மற்றும் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை 2011 முதல் 2021வரை அதிமுக செய்யவில்லை என்பதனை வெள்ளை அறிக்கை மூலம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியாக கடனை அதிமுகவினர் விட்டு சென்றுள்ளனர். ஆனால், திமுக அரசு பதவியேற்ற 3 மாதங்களில் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களை செய்துள்ளது.
அதிமுக அரசு பதவியில் இருந்த நேரம் கரோனா தொற்று அதிகம் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.
இன்னும் இரண்டு மாத காலத்தில் மழைப்பொழிவு உள்ளதால் மழை காலம் முடிந்தவுடன் சாத்தையாறு அணை முழுவதுமாக தூர்வாரி அணையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, "அதிமுகவில், ஜெயலலிதா, சசிகலாவை ஏமாற்றி எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தார். இது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
திமுக அப்படியல்ல. நாட்டு மக்கள் நேரடியாக வாக்களித்து மு.க ஸ்டாலினை முதலமைச்சராக வெற்றி பெற செய்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்யும் அரசாக திமுக 5 ஆண்டுகளில் நல்லாட்சி புரியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயில்களில் நாளை வழிபாட்டுக்குத் தடை - அமைச்சர் சேகர் பாபு