மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரும்பனூர் ஊராட்சியில் நியாயவிலைக் கடையை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இன்று (செப். 30) திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த 16 மாதங்களில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் 100 விழுக்காடு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு எங்கேனும் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா..? அரசு, ஆட்சி, நிர்வாகம் குறித்துப் பேசாமல் என்னுடைய குடும்ப திருமண விழாவைக் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவது பொறுப்புள்ள அரசியல் தலைவருக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பல்வேறு ஆதாரங்களோடு என்னால் பேச முடியும்.
ஆனால், அரசியல் நாகரிகம் கருதி நாங்கள் கடந்து செல்ல விரும்புகிறோம். போலி பத்திரப்பதிவினைத் தடுக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று புதிய சட்டத்தையே கொண்டு வந்துள்ளோம். இதன் நில உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளோம். இதுகுறித்து முன்னாள் நடிகை வாணிஸ்ரீயின் கருத்தே சான்று.
இந்த சட்டத்தின் மூலம் அவரது 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பத்திரப்பதிவுத் துறையில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றிருந்தால் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். அதனை சரி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
எனது குடும்ப திருமணத்தால் ஏதேனும் இடையூறுகள் இருந்தனவா? அனைவரும் ஏழை, எளியோர், பணக்காரர் பாகுபாடின்றி, சாதி, மத வேறுபாடின்றி சரிசமமாக அழைக்கப்பட்டு விருந்து அளித்து கௌரவிக்கப்பட்டார்கள். இதில் என்ன ஆடம்பரம் இருந்தது? அரசியல் பேசாமல் தனிப்பட்ட குடும்ப விழாவை குற்றம்சாட்டி பேசுவது என்ன மனநிலை? கடந்த ஆட்சிக்காலத்தில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்களில் இவர்கள் உணவு அளித்தார்களா? அப்போதே அதை நாங்கள்தானே செய்தோம்.
தற்போது அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்காக எத்தனை கோடி செலவழித்தீர்கள் என்பதை எங்களாலும் ஆதாரத்துடன் சொல்ல முடியும். எனது குடும்பத்தில் என்னுடைய திருமணம் நடைபெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருமண நிகழ்வு இது. கரும்பும், வாழைமரங்களும் கட்டுவதை ஆடம்பரமாகக் கருதுவது தவறு.
இந்த விசயத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. மதுரையில் கடந்த 10 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளில் ஏதாவது தரம் உள்ளதா? அரசியலை அரசியலாகப் பேசுங்கள். தனிப்பட்ட விசயங்களை ஆதாரத்துடன் பேசினால் நல்லது” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை