மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்திற்கு வருவாய்ப் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக 14 லட்சத்து 75 ஆயிரத்து 522 ரூபாய் மதிப்பிலான முதலமைச்சர் நிவாரண நிதி, இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச தையல் இயந்திரம் ஆகியவற்றைப் பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.
விரைவில் அரசுப் பணியிடங்களுக்கான அறிவிப்பு
பின்னர் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நிறைய பயனாளிகளைச் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது.
முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் மனுக்களைத் தள்ளுபடி செய்யாமல், விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வாரம் ஒருமுறை பட்டா மாறுதல் சம்பந்தப்பட்ட இடத்தை, அலுவலர்கள் நேரில் ஆய்வுசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை உடனடியாக மீட்கவும், நில எடுப்பு விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
திமுக அரசு தவறு செய்யாது
மதுரை சர்வதேச விமான நிலையத்திற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் உத்தரவில், முதலமைச்சர் ஓரிரு நாள்களில் கையெழுத்திடுவார். அதன்பின்னர் நில எடுப்புப் பணிகள் விரைந்து நடத்தப்படும்.
திமுக அரசு வெளிப்படையாகச் செயல்படுகிறது, அதிமுக அரசு தவறு செய்ததால்தான் மக்கள் திமுகவை தேர்வுசெய்துள்ளனர். அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது" என்றார்.
இதையும் படிங்க: சசிகலா அதிமுகவை தனது குடும்பம் எனக் கூறுவது நகைப்பிற்குரியது - ஜெயக்குமார்