சென்னை: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "நிர்வாக வசதி காரணமாக எப்படி மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றனவோ, அதைப்போல பெரிய வட்டங்களும் பிரிக்கப்பட்டால்தான் நிர்வாக வசதி சரியாக இருக்கும்.
தவறு நடந்தால் அனுமதி ரத்து
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இ-சேவை மையங்களில் தவறு நிகழ்ந்தால், உடனடியாக அனுமதி ரத்துசெய்யப்பட்டு தொடர்புடையவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அனைத்து இ-சேவை மையங்களிலும் தவறுகள் நடைபெறுவதில்லை.
மதுரை விமான நிலையத்திற்கான விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிவடையும். இதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 460 ஏக்கர் பட்டா நிலமும், 161 ஏக்கர் புறம்போக்கு நிலமும் உள்ளன.
விரைவில் விரிவாக்கப் பணி தொடக்கம்
அனைத்துச் செலவுகளுக்கும் சேர்த்து ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலத்தில் அரசுத் துறைக்குச் சொந்தமான நிலமும் உள்ளன. ஆகையால், அதற்குரிய துறைகளின் அனுமதி பெற்று, விரைவில் விரிவாக்கப் பணி தொடங்கும்.
நில உரிமையாளர்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, வழங்கப்பட்டுவிட்டன. இதற்கு முன்பாக இருந்த அலுவலர்கள் எப்படி பேசி முடித்தார்களோ, அந்த அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். நாங்கள் புதிதாக எதுவும் குழப்ப விரும்பவில்லை.
எங்களைப் பொறுத்த அளவில் விரிவாக்கப் பணிகள் விரைவில் நடக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கிறது. அதனால் முதலமைச்சரின் அனுமதி பெற்று இந்தப் பணிகள் தொடங்குவதற்கான வேலைகளைச் செய்வோம்" என்றார்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் மாட்டிக்கொண்ட கேரள அமைச்சர்- ஆடியோ வெளியானதால் பரபரப்பு