மதுரை: கொடைக்கானலைச் சேர்ந்த மினா எர்க் ஆவரி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "மலைகளின் இளவரிசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலாத் தலமாக உள்ளது. மேலும் இங்கிருக்கும் வனப்பகுதியில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.
கொடைக்கானலில் 31 தேவாலயங்கள், 18 கோயில்கள், 10 மசூதிகள் உள்ளன. மேலும் நகரின் பல இடங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள், ஸ்பீக்கர்கள் அதிக ஒலி அளவில் பயன்படுத்துகின்றன. இதனால் வனப்பகுதியில் காற்று மாசு ஏற்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதிப்பாக உள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து தெளிவாக வரையறுத்துள்ளது. ஒலி மாசு கட்டுப்பாட்டுச் சட்டம் 2000இன்படி, குறிப்பிட்ட டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் வகையில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே கொடைக்கானலில் வனப்பகுதியில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி, அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்கள், பொது, சுப, துக்க நிகழ்வுகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்படுகிறது.
இது குறித்து நகராட்சி, வருவாய்த் துறை அலுவலர்கள், உரிய நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கி தடை குறித்து தெரிவிக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை வாடகைக்கு விடும் நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!