மதுரை: தல்லாகுளத்தைச் சேர்ந்த வசந்தி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். இவர், கடந்த மாதம் கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவரை வழிமறித்து, அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயைப் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து வசந்தி உள்பட ஐந்து காவலர்கள் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த வசந்தி முன்பிணை கோரி மனு தாக்கல்செய்திருந்தார்.
தொடர்ந்து கடந்த மாதம் நீதிபதி புகழேந்தி முன்பு அவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆய்வாளர் வசந்தி கைதுசெய்யப்பட்டாததற்கு கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரால், தனது சகோதரருடன் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த ஆய்வாளர் வசந்தி கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், பிணை கோரி வசந்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் தாக்கல்செய்த வழக்கு முன்னதாக நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், "காவல் ஆய்வாளர் வசந்தியும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவரது கணவரின் செல்போன் எண் கேட்டதற்குக்கூட தெரியாது என்றே பதிலளித்தார். 90 விழுக்காடு கேள்விகளுக்கு அவர் விடையளிக்கவில்லை. ஆகவே, அவருக்குப் பிணை வழங்கக் கூடாது" என எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி, ”காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர் இன்னும் ஒரு மணிநேரத்தில் விசாரணை அலுவலர் முன்பாக முன்னிலையாக வேண்டும். விசாரணை அலுவலர் அவரிடம் விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கினால் வசந்திக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” எனக் குறிப்பிட்டு வழக்கை நாளைக்கு (அக். 8) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தியாகத் தலைவர்களை சாதி ரீதியாக அடையாளப்படுத்தாதீங்க!