மதுரை: அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் துறை அதிகாரி பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்குவது தொடர்பாக, அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அம்பாசமுத்திரம் சிவசக்தி நகரைச் சேரந்த அருண்குமார் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு, நான் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தேன். நண்பர் மகேந்திரனும் நானும் சென்ற போது அங்கு வந்த சுபாஷ் முன்விரோதம் காரணமாக மகேந்திரனுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரது நண்பர்களும் மகேந்திரனை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸார் கடந்த மார்ச் 10ம் தேதி கைது செய்தனர்.
மேலும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்கு பதிவு செய்து, சட்ட விரோதமாக காவலில் வைத்த போலீசார், கொடூரமாக தாக்கி எனது நான்கு பற்களையும் உடைத்தனர். மற்ற கைதிகளின் பற்களையும் டிஎஸ்பி பல்வீர் சிங் உடைத்தார். பின்னர் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் சேரன்மாதேவி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்புகளுக்கு பி.யு.சி. தகுதியில்லையா? பி.யு.சி. படித்தவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி!
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், போலீஸ் அதிகாரி தாக்கியதில் பற்கள் உடைந்த எனக்கு எஸ்சி, எஸ்டி உட் பிரிவில் வழக்கு பதிந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் வழக்கானது நீதிபதி டி. நாகர்ஜூன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி மனுதாரரின் கோரிக்கை குறித்து, உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்குவது தொடர்பாக, அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29 தேதி ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: "அரசு மருத்துவமனைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்" - ககன்தீப் சிங் பேடி!