ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு நடத்தப்படாது என ஆளும் திமுக அரசு கூறியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ’நீட் தேர்வு தடை செய்யப்படும்’ என அளித்த உறுதியே மாணவர்களின் மனக் குழப்பத்திற்கும், சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கும் காரணம்.
ஆகவே தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும், நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும் மன அழுத்தத்துக்கு ஆளான மாணவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "அரசியல் கட்சிகள் வாய்மொழியாக வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிய வழக்கில், வாக்குறுதிகளை சட்டத்துக்கு உள்பட்டே நிறைவேற்ற இயலும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கொலை செய்ய சொன்னாலும் செய்துவிடுவீர்களா...? - எஸ்.பியிடம் உயர் நீதிமன்றம் காட்டம்