மதுரை: ’புரட்சித்தலைவர் வாழ்க!’, ‘என்றும் மக்கள் திலகம்’, ‘எங்களின் இதயக்கனி எம்.ஜி.ஆர்’ என்ற கோஷங்கள் ஒரு பக்கம் முழங்குகிறது. மற்றொரு பக்கம், பட்டாசுகள் வெடிக்க, ஆளுயரத்தைத் தாண்டிய எம்.ஜி.ஆரின் கட் - அவுட்டிற்கு பால் அபிஷேகம் நடக்கிறது. அங்கிருந்து சற்று தொலைவில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இப்படியான சுவாரஸ்ய தருணங்கள் நிகழ்ந்தது, ஊர் கொட்டகை முன்னாலும் அல்ல. 1970 களிலும் அல்ல.
மாறாக, 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் சினிமா பல்வேறு தொழில்நுட்பங்களையும், பல தரப்பட்ட முண்ணனி நடிகர்களையும் கொண்டிருக்கும் 2022 ல் தான் நடைபெற்றது. சினிமாவின் ரசனைக்கு பெயர் பெற்ற மதுரையில் உள்ள திரையரங்கத்தில் தான் இந்த அதிசயமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இவை அனைத்திற்கும் மக்களின் இதயக்கனியாக திகழ்ந்து வந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் காரணமாக இருக்கிறார் என்பதே உண்மை.
49 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தான் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு காரணம். எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களாக இருந்து, அதிமுகவின் தீவிர தொண்டர்களாக மாறியவர்கள் முதல், தற்போது அதிமுக பொறுப்பு வகிப்பவர்கள் வரை அனைவரும் இப்படத்தை பார்க்க வந்தனர். இதுகுறித்து, மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபால் கூறுகையில், “முதல்முறையாக இந்தப் படம் வெளியானபோது வரலாற்று சாதனை படைத்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களால் வரவேற்கப்படும், படமாக உலகம் சுற்றும் வாலிபன் திகழ்கிறது. இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை” எனக் கூறினார்.
கடந்த 1973 ஆம் ஆண்டு மே 11 ஆம் நாள் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ அரங்கேறி, தமிழ்நாடு முழுவதும் கொடி கட்டிப் பறந்தது. இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என மூன்றினையும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே ஏற்று அதனை சாதனையாக மாற்றி இருந்தார். இதில், மஞ்சுளா, லதா, சந்திரலேகா, நம்பியார், நாகேஷ் என்ற ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இப்படம், வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்தது.
மேலும், எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திலும் முக்கிய திருப்பு முனையை இப்படம் உண்டாக்கியது. இவ்வாறு பல்வேறு சாதனைகளைக் கடந்த இப்படம், கடந்த ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரானது. இந்த திரைப்படம் வெளியாகி 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே வரவேற்புடன் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று வெளியிடப்பட்டது.