திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்காவைச் சேர்ந்த ராமச்சந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், "திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்காவிலுள்ள மணியங்குறிச்சி கிராமம், பல கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தக் கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
மணியங்குறிச்சி கிராமத்தில் திருச்சி-பெரம்பலூர் மாவட்டத்தை இணைக்கும் 13 அடி சாலை உள்ளது. இந்தச் சாலையில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி உரிய அனுமதி பெறாமல் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிலை அமைக்க உள்ள இடம் அரசு பொது நிலமாக இருந்து வருகிறது.
இப்பகுதியில் சிலை அமைப்பதால் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்படும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் அதிக அளவு வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, சிலை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அலுவலர்களுக்கு அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் சட்டத்திட்டங்களை கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு அரசு அரசாணை 2017இன் படி ஆறு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.