அருள்மிகு மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நவராத்தி கலைவிழா அக்டோபர் 17இல் தொடங்கி
25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவின்போது மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறும்.
நவராத்திரி கலைவிழாவின் முதல்நாளான சனியன்று (அக்.17) மாலை, அருள்மிகு மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார, ஆராதனைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொலுச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபங்களில் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, முப்பெருந்தேவியர், திருமால் அவதாரங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி, சொக்கர் ஆகியோரோடு திருவிளையாடப்புராண நிகழ்வுகளும் கொலுவில் இடம் பெற்றுள்ளன.
பன்றிக்குட்டியாய் மாறி பால் கொடுத்தல், கல் யானைக்கு கரும்பு அளித்தல், மீனாட்சி திருக்கல்யாணம், குண்டோதரன் பசிப்பிணி போக்குதல், பிட்டுக்கு மண் சுமத்தல், வெள்ளியம்பலத்தில் நடராஜர் கால்மாறி ஆடுதல் என பல்வேறு புராண் நிகழ்வுகள் கொலு மண்டபங்களில் இடம் பெற்றுள்ளன.
இன்று (அக்.,18) வாதவூர் அடிகளுக்கு உபதேசம், நாளை (அக்.,19) சுவாமி தன்னைத்தானே பூஜித்தல், நாளை மறுநாள் (அக்.,20) விறகு விற்றல், அக்டோபர் 21ஆம் தேதி கடம்பவன வாசினி, அக்டோபர் 22ஆம் தேதி வேல்வனை செண்டு தொடுத்தல், அக்டோபர் 23ஆம் தேதி அருள்மிகு மீனாட்சி பட்டாபிஷேகம், அக்டோபர் 24ஆம் தேதி மகிஷாசூர மர்த்தினி, அக்டோபர் 25ஆம் தேதி சிவபூஜை அலங்காரங்களில் காட்சியளிப்பார்.
நவராத்திரி கொலு உற்வசத்தை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை உபயத்திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை நடைபெறாது. கொலு உற்சவ நாள்களில் தினசரி மாலை 4 முதல் 5.30 மற்றும் இரவு 6.45 முதல் 8 மணி வரை மீனாட்சி அம்மனை மூலஸ்தான சன்னதியில் தரிசனம் செய்யலாம். இடைப்பட்ட நேரமான மாலை 5.30 முதல் 6.45 வரை மீனாட்சி அம்மனுக்கு மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம் அலங்காரம், கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.
இந்த அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் நேரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவர் அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உற்சவத்தில் முதல் நாள் அலங்காரத்தில் உள்ள அம்மனை தரிசிக்க இயலாத பக்தர்களுக்கு மறுநாள் காலை 6 முதல் 7 மணி வரை அம்மனை தரிசிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை முதல் தொடங்கும் நவராத்திரி விழா