கடந்த 2018ஆம் ஆண்டு பிப்.2ஆம் தேதி உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கிழக்கு கோபுரம் அருகே உள்ள வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்துக்குள்ளானது. இது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் கலைநயமிக்க 150க்கும் மேற்பட்ட தூண்களும், அவற்றிலிருந்த சிற்பங்களும் சிதைந்து போயின.
இதனை உடனடியாக மறுகட்டமைப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசு 12 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. அழிந்துபோன அந்த தூண்களில் இருந்த சிற்பங்கள் குறித்து ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அதே வடிவத்தில் அமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதும் மூன்று ஆண்டுகள் கடந்தும் வீர வசந்த ராயர் மண்டபம் புனரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
இதுகுறித்து சிற்ப ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில், ''கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெற்ற சிற்ப பயிற்சியில் பங்கேற்றதுடன் தீ விபத்துக்கு ஆளான வீர வசந்தராயர் மண்டப சிற்பங்கள் குறித்து ஆவண பணிகளிலும் நான் ஈடுபட்டேன். கோயில் கட்டட கலை குறித்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி பெற்றுள்ளேன். அதுபோன்ற சிற்ப பயிற்சி எடுத்த இடங்களில் ஒன்றுதான் வீர வசந்தராயர் மண்டபம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 1300 வருடங்கள் பழமை வாய்ந்தது. கிபி 7ஆம் நூற்றாண்டு வாக்கில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கட்டுமானத்தால் ஆன கோயில் இருந்துள்ளது என்றும் பிறகு 13ஆம் நூற்றாண்டில் கருங்கற்கள் கொண்டு கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்றும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறியுள்ளார். 1750 இல் மீனாட்சி கோயில் பேரழிவை சந்தித்துள்ளது.
பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பணியாளர்கள் கடைக்காரர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து இரவோடு இரவாக தீ பரவாமல் தடுத்து காப்பாற்றினர். இருந்தபோதும்கூட கிபி 1611ஆம் ஆண்டு முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பட்ட வீர வசந்தராயர் மண்டபம் பெரும் சேதத்துக்கு உள்ளானது. அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட தூண்கள் முழுமையாகவும் பகுதி அளவிலும் சேதமடைந்தன. சிற்ப மாணவியாகவும் ஆய்வாளராகவும் இச்சம்பவம் எனக்கு பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசு இதற்காக அமைத்த 12 பேர் கொண்ட குழு வேகமாக பணி செய்து உடனடியாக திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இந்நிலையில் அங்குள்ள மண்டபத்தை மீண்டும் உருவாக்குவதற்கான கற்கள் திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம், நாமக்கல், ராசிபுரம் பகுதியில் இருப்பதை அறிந்து அதனை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்போது புனரமைப்பு பணிகள் முடங்கியுள்ளன.
மூன்று ஆண்டுகளை கடந்த பின்னரும்கூட வீர வசந்தராய மண்டபம் எரிந்த நிலையில், மிக அவலத்துடன் காட்சியளிப்பது வேதனையாக உள்ளது. கற்களை எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் கோயிலில் வந்து பார்த்தார்கள் என்றால் கண்டிப்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
தமிழ்நாடு அரசு இதற்கு என்று ஒரு குழு அமைத்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல மதுரை மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும். இனியும் தாமதிக்காமல் வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க அரசு முன்வர வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: பக்தர்கள் இல்லாமல் நடந்த அழகர்கோயில் ஆடி அமாவாசை திருவிழா!