மதுரை அரசு இராசாசி மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இங்கே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை முறையாக அகற்றாததால், மருத்துவக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளன.
இதுமட்டுமல்லாமல் நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், ஊழியர்கள் அணியும் உடைகளும் அக்குப்பைகளோடு குவிந்து கிடப்பதால் அந்தப் பகுதியில் நோய்த்தொற்று பரவும் இடர் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாகச் செல்லும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படும் இடர் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை நிர்வாகம் முறையாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.