மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் 26 மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. தேர்தல் பார்வையாளர் சதிஷ் குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் ஆகியோர் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
இது குறித்து தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணம் பேசுகையில், "திருப்பரங்குன்றம் தொகுதி 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்தெந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள், வீல் சேர், வாக்கு மையங்களில் குடிநீர், மின் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 170 வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூர் ஆட்கள் தொகுதிக்குள் நடமாடுவது குறித்து காவல் துறையிடம் கூறியுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்றார்.