சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களின் விலை பட்டியலை வெளியே தெரியும்படி வைப்பது, மதுபானம் வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறை படுத்தாத நிலையில், மத்திய, மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. மேலும், 21 வயதுக்கு கீழ் உள்ள எதிர்கால இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். மது சமுதாயத்தையே சீரழித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை எனக் குறைக்க உத்தரவிட வேண்டும்.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடை செய்யும் வகையில், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என சட்டம் கூறுகிறது.
ஆனால், தற்போது இளைய சமுதாயத் தினர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். பொது நலன் கருதி, மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களைத் தடுக்க, மதுபான விற்பனை நேரத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தலாம். மது குறித்து பொதுமக்கள், மது அருந்துவோரிடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும்.
தமிழகத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீதான வழக்குப் பதிவு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மது அருந்துவது சமூகத்துக்குக் கேடானது. இது மது அருந்துபவரை மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினர், அருகில் உள்ளோரையும் பாதிப்படையச் செய்கிறது.
எனவே, இதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அரசின் நிர்வாக முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது தெரியும். ஆனால், பொது நலன் கருதி சில வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்குகிறோம். மதுபாட்டில்களில் அடையாள வில்லை (லேபிள்), விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் முதலானவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். மேலும், தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவிக்கவேண்டும், என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
இந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தாத மத்திய மற்றும் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கறிஞர் ரமேஷ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரத சக்கரவர்த்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் குழு ஆய்வு செய்த டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ள படங்களுடன் கூடிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர் குழு ஆய்வு செய்வதை தெரிந்து அவசர கதியில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் உள்ள படங்களில் தெளிவாக தெரிகிறது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மதுபான விலை பட்டியலை நிரந்தர பலகையாக டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!