மாணவர் குறளரசன் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னரிமை அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறுகையில், 'எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையில் ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக 2017 நவம்பர் 30ஆம் தேதி மத்திய அரசு பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் உள்ள ஒன்பது முன்னுரிமை பட்டியலில் எட்டாவது முன்னுரிமை - பணியிலுள்ள வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மனுதாரர் எட்டாவது முன்னுரிமை பட்டியலில் வருகிறார்.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் ராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் 2018 ஜீன் 1ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றிருந்த ஒன்பது முன்னுரிமைகளில் கடைசி ஏழு முதல் ஒன்பது வரையிலான முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு பணியிலுள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான முன்னுரிமை பெற முடியாத நிலை உள்ளது.
முன்னாள் ராணுவத்தினருக்கு கிடைக்கும் சலுகை தற்போது ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அந்த வகையில் மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள கடைசி மூன்று முன்னுரிமை பட்டியல் இல்லாமல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்க முடியாது.
பணியிலுள்ள ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் உயர் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் நிறைவேறாது. இதனால் தமிழக அரசின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் ராணுவ வீரர்களுக்கான முன்னுரிமை பட்டியலில் மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 7 முதல் 9 வரையிலான பட்டியல் நீக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடஒதுக்கீட்டு பிரிவில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க வேண்டும்' என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நீதிபதி கூறுகையில், 'மாணவர் சேர்க்கையில் முன்னாள் ராணுவ வீரர், பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசு என்ற பாகுபாடு கூடாது. தற்போது மக்களால் உண்மையான ஹீரோவாக பார்க்ப்படுபவர் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன். இவரது மகள் தற்போது அரசு மருத்துவக் கல்லுாரியில் ராணுவ இடஒதுக்கீட்டு பிரிவில் சேர நினைத்தால் முடியாது. ஆனால், பாகிஸ்தானில் இருந்து திரும்பிய உடன் அபிநந்தன் பதவி விலகி இருந்தால், முன்னாள் ராணுவ வீரர் என்ற அடிப்படையில் அவரது மகளுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கு சீட் கிடைத்திருக்கும். இந்த பாகுபாட்டை ஏற்க முடியாது' என கருத்து தெரிவித்துள்ளார்.