மதுரை: எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி விருதுநகர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
மதுரையின் தனிச்சிறப்பு வாய்ந்த மதுரை மல்லிகை நாளொன்றுக்கு சராசரியாக 50 டன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மதுரையில் இருந்து வெளிமாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக மதுரை மல்லிகை விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இன்று ஒரு கிலோ மதுரை மல்லிகை விலை ரூபாய் 400க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற பூக்களின் விலையும் மிகக் குறைந்து காணப்படுவதால் உற்பத்தியாளர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
பூக்களின் விலை பின்வருமாறு, முல்லை ரூ.250, பிச்சி ரூ.300, சம்பங்கி ரூ.80, பட்டன் ரோஸ் ரூ.120, செண்டு மல்லி ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “கடந்த சில நாள்களாகவே ஏறக்குறைய இதே விலை நிலவரம் நீடிக்கிறது. இன்று மதுரை மல்லிகை விலை ரூபாய் 400 ஆக சரிந்துள்ளது. இனி வருங்காலங்களில் முகூர்த்த நாள்களை பொருத்து விலையில் மாற்றம் இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க : மீண்டும் உயருகிறதா தக்காளி விலை? கோயம்பேடு மார்கெட் நிலவரம்!