கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. நான் பொதுப்பிரிவினருக்கான 6ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.
இந்நிலையில் நான் வெற்றி பெற்ற சித்தலவாய் ஊராட்சி 6ஆவது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி வெற்றி செல்லாது என மாவட்ட தேர்தல் அலுவலருமான மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 6ஆம் தேதி உத்தரவிட்டார். உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்வதற்கு மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அதிகாரம் கிடையாது. என் வெற்றியைச் செல்லாது என அறிவித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.
அந்த உத்தரவைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். 6ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும். எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வார்டு உறுப்பினர் தேர்தலிலும் துணைத் தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று சான்றிதழ் பெறும்ப்வரை தேர்தல் ஆணையம் என்ன செய்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் மனுதாரர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய திபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் மனு தாக்கல்