ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக்கை பிரபலமடைய வைப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மே27ஆம் தேதியன்று சிவில் இன்ஜினியரிங் லேர்னர்ஸ் என்ற முகநூல் குழுவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சுத்தியல் பற்றி கேட்க, அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் பற்றி பதிவிட்டார். பின்னர் அது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் Pray_For_Neasamani என்ற ஹேஸ்டேக்கை என்பதை நெட்டீசன்கள் நேற்று ட்ரெண்டாக்கினர்.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலக அளவிலும் ட்ரெண்டிங்கில் கொண்டுவந்தனர். இது ஒட்டுமொத்த உலக மக்களிடமும் 'யார் இந்த நேசமணி?' என்ற கேள்வியை எழச் செய்ததோடு, உள்ளூர் ஊடகங்கள் முதல் உலக ஊடகங்கள் வரை இதுகுறித்த செய்திகள் வெளியிட்டன.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சில இளைஞர்கள் நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வசனம் கொண்ட போஸ்டர், பிளக்ஸ் பேனர் உள்ளிட்டவற்றை மதுரை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். இது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
2001ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் 'பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி'. அதில் வடிவேலு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோருடன் சேர்ந்து பல குறிப்பிடும்படியான நகைச்சுவை காட்சிகளில் நடித்திருப்பார். அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகளைக் கொண்டு இன்றும் பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து அனைவரையும் பிரமிக்கச் செய்துள்ளது.