மதுரை: மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக 72 வார்டுகளாக இருந்த மதுரை மாநகராட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனைகளின் எண்ணிக்கை, பணியில் உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள அறுவைச் சிகிச்சைக்கூடங்கள் எண்ணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல்கள் கேட்கப்பட்டன.
இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய பதிலில், "மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், பழங்காநத்தத்தில் மகப்பேறு மருத்துவமனையும் உள்ளன. 32 ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் 23 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
இவர்களில் 8 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களாவர். தற்போது வரை நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மண்டலம் 1-இல் 3 மருத்துவர்கள், மண்டலம் 2-இல் ஒருவர், மண்டலம் 3-இல் ஒருவர், மண்டலம் 4-இல் நான்கு மருத்துவர் என மொத்தம் ஒன்பது மருத்துவ அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மதுரை நகரில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் நான்கு அறுவைச் சிகிச்சை அரங்குகள் மட்டுமே உள்ளன. இதில் இராயலு அய்யர் மருத்துவமனை அறுவைச் சிகிச்சை அரங்கு கரோனா தொற்று காரணமாக தற்போது செயல்பாட்டில் இல்லை.
செல்லூர் மற்றும் கோ.புதூர் மருத்துவமனைகளில் உள்ள அறுவைச் சிகிச்சை அரங்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட 32 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 21 நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஹக்கிம் கூறும்போது, "மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவர், செவிலியர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.
பழைய எண்ணிக்கையே தொடர்கிறது. அதிலும் 9 இடங்கள் காலியாக உள்ளன. செவிலியர் பணியிடங்கள் அதிக அளவில் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதும் இல்லை. செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் செல்லும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை.
மேலும், அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுவீச்சில் செயல்பட்டால் அங்கு நோயாளிகள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.
எனவே மாநகராட்சி ஆணையர் தனிக்கவனம் எடுத்து கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். நகர்ப்புற சுகாதார நிலையங்களில் இரவுப்பணியில் மருத்துவர் இருக்க வேண்டும். கூடுதல் அறுவைச் சிகிச்சை அரங்குகளை உருவாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய்களை சாலை, அழகுப்படுத்தும் பணிக்கு செலவழிக்கும்போது சுகாதாரத்துக்கு சில நூறு கோடி ரூபாய்களையாவது ஒதுக்க வேண்டும்" என்றார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவர்கள் நியமிக்க அரசிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் சுகாதார நிலையங்களின் செயல்பாட்டையும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கழிவுகளை எரிப்பதால் மூச்சுத் திணறல்: பிரபல மருத்துவமனை மீது புகார்