மதுரை: திருமங்கலம் பேருந்து நிலைய கட்டிடம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், "திருமங்கலம் நகராட்சியின் நகர்ப் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்பாக திருமங்கலம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மக்கள்தொகையும், வாகனங்களும் அதிகரித்த நிலையில் வேங்கட சமுத்திரம் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட மதிப்பீடும் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
தற்போது வேங்கட சமுத்திரம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்குப் பதிலாகத் திருமங்கலம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை இடித்து மீண்டும் கட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்களை இடிக்க குத்தகை மற்றும் வாடகைதாரர்களை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எனவே, திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை இடிக்கவும், மறு கட்டமைப்பு செய்யவும் இடைக்காலத் தடை விதித்து அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் வேங்கட சமுத்திரம் கிராமத்தில் திருமங்கலம் நகராட்சிக்கான புதிய பேருந்து நிலையத்தைக் கட்ட உத்தரவிட வேண்டும்" என மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமங்கலத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இது ஒரு கான்கீரிட் கட்டடப் பேருந்து நிலையம் ஆகும்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களை நாம் இப்போதும் பாதுகாக்கிறோம். அதேபோல அணைகள் மற்றும் பிற பழமையான கட்டமைப்புகள் இன்றும் கம்பீரமாக உள்ளன. ஆனால் நவீன யுகத்தில் ஒரு கட்டடம் வெறும் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படும் வகையிலிருந்தால் நாம் எங்குச் செல்கிறோம் என்பது தெரியவில்லை.
எனவே திருமங்கலம் பேருந்து நிலையத்தை அதன் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யத் திருச்சி NIT நிபுணர் குழு அமைத்து உத்தரவிடப்படுகிறது. இக்குழு, திருமங்கலம் பேருந்து நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நிபுணர் குழு திருமங்கலம் பேருந்து நிலையத்தின் ஆயுட்காலம் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.
திருமங்கலம் பேரூராட்சி ஆணையர் திருமங்கலம் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வணிக வளாகத்திலிருந்து நகராட்சிக்குக் கிடைக்கும் வருவாய் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரின் விவரங்களையும், மோசமான கட்டுமானத்திற்காக ஒப்பந்ததாரரை தடுப்புப்பட்டியலில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் மதுரை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமங்கலம் காவல் நிலைய காவல் கண்காணிப்பாளர் (போக்குவரத்து) ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். திருமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட 234 வகை உயிரினங்கள் பறிமுதல்!